100 மாணவர்கள் கல்வி அறிவியல் சுற்றுலாவாக 2 நாட்கள் “இஸ்ரோ பயணம்

பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தவும், விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு கல்விஅறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த நடப்பு கல்வி ஆண்டில் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டுவரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 55 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் என 100 மாணவர்கள் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இஸ்ரோவுக்கு கல்வி அறிவியல் சுற்றுலாவாக வருகிற செப்டம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் செல்கிறார்கள். இம்மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக 3 பெண் ஆசிரியைகள் உள்பட 10 ஆசிரியர்கள் செல்கிறார்கள்.
26 ந் தேதி பள்ளியில் இருந்து புறப்படும் மாணவர்கள் குழுவினர் 27 ந் தேதி பெங்களூரு அடைகிறார்கள். முதல் நாள் பயணமாக இஸ்ரோவை பார்வையிட்டு பின்னர் அங்கு பணிபுரியும் அறிவியல் அறிஞர்களுடன் கலந்துரையாடி இஸ்ரோ கண்காட்சியினையையும் பார்வையிட உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் பல்வேறு ரக விமானங்களின் கண்காட்சியை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்துகொள்கிறார்கள். பின்னர் 2 வது நாளில் விஸ்வேஸ்வரய்யா அறிவியல் ஆய்வுக்கூடம் சென்று அங்கு வேதியியல், இயற்பியல், விலங்கியல் தாவரவியல், மண்ணியியல் உள்பட பல்வேறு அறிவியல் பிரிவுகளை கொண்ட செயல்படும் மாதிரிகளை காண உள்ளனர். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு பின்னர் கோளரங்கம் சென்று அங்கு பல்வேறு கோள்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்கிறார்கள்.
முன்னதாக, இந்த கல்வி அறிவியல் சுற்றுலா குறித்த கருத்தரங்கு ஊத்துக்குளி கொங்கு பள்ளி வளாகத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் ( ஐஸ்கோப் ) நிறுவனத்தின் இயக்குனர் ஆர். பாலமுருகன் இஸ்ரோவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம், அறிவியல் குறித்த தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய வாய்ப்புகள், இஸ்ரோவில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து வீடியோ படத்துடன் விளக்கி பேசினார். இந்த கருத்தரங்கில் பள்ளி தலைவர் ஏ.கே.சி தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர் உள்பட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படங்கள் : கருத்தரங்கில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் ( ஐஸ்கோப் ) நிறுவனத்தின் இயக்குனர் ஆர். பாலமுருகன் பேசியபோது எடுத்தப்படம்